Friday, August 10, 2012

200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றார் உசைன் போல்ட்



லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட்  மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

ஏற்கனவே 100 மீற்றரிலும் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் உசைன் போல்ட் எதிர்பார்த்தது போன்றே வெற்றிபெற்றார்.

இதில் முதலிடத்தை உசைன் போல்ட் வென்றதோடு, 2ஆம், 3ஆம் இடங்களையும் உசைன் போல்ட்டின் சக நாட்டவர்களே வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

200 மீற்றர் தூரத்தை உசைன் போல்ட் 19.32 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொள்ள,உசைன் போல்டிற்கு சவாலாக மாறிக் கொண்டிருப்பவராகக் கருதப்படும் யோஹன் பிளேக் 19.44 செக்கன்களில் 200 மீற்றர் தூரத்தை ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜமைக்காவின் மற்றொரு வீரரான வரன் வெய்ர் குறித்த தூரத்தை 19.84 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் முதலிடத்தைப் பெற, யோஹன் பிளேக் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஒலிம்பிக்கில் 100 மீற்றரில் புதிய சாதனையுடன் தங்கம் வென்ற உசேன் போல்ட்டின் ஓட்டம் (காணொளி)


லண்டனில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய ‌போட்டியில் ஜமேக்க வீரர் உசேன்போல்ட் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

அவர் ஆண்களுக்கான 100 மீ.ஓட்டப்பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார்.

இவருக்கு பின்னர் ஜமைக்காவின் யோஹான் பிளேக் 9.75 வினாடிகளில் இரண்டாம் இடமும், அமெரிக்காவின் ஜஸ்டின் 9.79 வினாடிகள் வந்து மூன்றாம் இடமும் பெற்றனர்.